சேலம் மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பொலிவுறு நகர் திட்டத்தின் கீழ் மத்திய அரசுடன் மாநகராட்சியும் இணைந்து குடிநீர் வசதி, டிஜிட்டல் வசதி, பாதாள சாக்கடைத் திட்டம் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, சேலத்தின் மையப்பகுதியான சின்னக்கடை வீதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி, சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
தொடங்கப்பட்டதோடு சரி ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக அனைத்து பணிகளும் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளன. தற்போது மழைக்காலம் தொடங்கிவிட்டதால் சின்னக்கடை வீதி முழுக்க வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள், வணிகர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர்.
அந்த வழியாக நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களும் காய்கறிகள், பழங்கள், பூக்கள் ஆகியவை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களும் மாநகரப் பேருந்துகளும் செல்வதால் சாலைப் பணிக்காகத் தோண்டப்பட்ட இடங்கள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன.
மழைநீர் குளம்போல் தேங்கி கழிவுநீராக துர்நாற்றம் வீசிவருவதோடு கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவ வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அப்பகுதிவாசி அரவிந்தன் கூறுகையில், "சாக்கடைக் கழிவுநீர் கடைகள், வீடுகளுக்குள் புகுந்திருப்பதால் அப்பகுதி வாழ்மக்கள் துர்நாற்றத்துக்கு இடையே வாழ வேண்டிய துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது" என்று தெரிவித்தார்.
மேலும், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசால் சேலம் மாநகராட்சி தமிழ்நாட்டிலேயே சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டு 25 லட்ச ரூபாய் பரிசாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கியது நினைவுகூரத்தக்கது.