சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா இன்று (ஜூலை 10) நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 104 மாணவ, மாணவிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பட்டங்களை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், “பட்டமளிப்பு விழாக்களில் பங்கேற்பது மகிழ்ச்சிக்கு உரியது. மாநிலத்தில் உள்ள 36 அரசுக் கல்லூரிகளிலும் 2 ஆண்டுகளாக நானே கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி வருகிறேன். தமிழ்நாட்டை பொறுத்தவரை 36 அரசுக் கல்லூரிகள், 21 சுயநிதி கல்லூரிகள், நிகர்நிலை கல்லூரிகள் 13 என மொத்தமாக 70 கல்லூரிகள் உள்ளன.
இந்தியாவில் உள்ள 36 மாநிலங்களில், தமிழ்நாட்டைப் போல ஒன்றரை மடங்கு அதிக பரப்பளவு உள்ள மாநிலங்களை விட இங்கு அதிக எண்ணிக்கையில் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் 11 ஆயிரம் மாணவர்கள் மருத்துவக் கல்வி நிறைவு செய்து வெளியே வருகின்றனர். சேலத்தில் 104 பேர் பட்டம் பெறுகிறார்கள்.
தற்போது ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்க 400 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரி தொடங்க வேண்டும் என்பது கலைஞரின் இலக்கு. மத்திய அரசு இப்போது இந்த இலக்கை அறிவித்துள்ளது. இன்னும் 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி தேவை என்ற நிலை உள்ளது. முதலமைச்சர் தொடர்ந்து மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறார்.
ஆறு மாவட்டங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டால், இந்திய அளவில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி உள்ள பெருமையை தமிழ்நாடு அடையும். விரைவில் அந்த கோரிக்கை நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. திருப்பத்தூர், தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும்.
150 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வரும் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தொடர்ந்து பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்படும். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு பிறகு கட்டண வசதி வார்டுகள் சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டன. தொடர்ந்து மதுரை மற்றும் கோவையில் கட்டண வசதி வார்டுகள் தொடங்கப்பட்டன.
விரைவில் தருமபுரியிலும் தொடங்கப்பட உள்ளது. தமிழ்நாட்டின் அரசு திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதில் சேலம் மருத்துவனை முன்னோடியாக உள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் 1.54 கோடி பேர் பயனடைந்துள்ளனர். தமிழகத்தில் 4-வது இடமாக சேலம் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசின் மருத்துவ சேவையின் மூலம் சேலத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புற நோயாளியாக பயன்படுத்தி வருகின்றனர்.
ஒரு மாதத்தில் ஆயிரத்து 100 பிரசவங்கள் சேலம் மருத்துவமனையில் நடைபெறுகிறது. சேலம் மட்டுமன்ற அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும் சேலம் மருத்துவமனையை பயன்படுத்தி வருகின்றனர். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நோயாளிகளைத் தேடி செல்லும் நிலை உள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான நோயாளிகளை சந்திப்பதால் அரசு மருத்துக் கல்லூரி மாணவர்கள் அதிக அனுபவத்தை பெறுகின்றனர்.
சேலம் அரசு மருத்துவமனையில் 35 கோடி ரூபாயில் செவிலியர் பயிற்சி பள்ளி உருவாக்கப்படும். நவீன உபகரணங்களுடன் கூடிய ரூ.5 கோடியில் முழு உடல் பரிசோதனைக் கூடம் அமைக்கப்பட உள்ளது. புற்றுநோயை கண்டறியக்கூடிய பெட் சிடி ஸ்கேன் தொடங்கப்பட உள்ளது. இதயநோய் சிறப்பு சிகிச்சை மையம் 4 கோடி ரூபாய் மதிப்பில் கேத் லேப் உருவாக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் 2ஆயிரத்து 286 ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீரிழிவு பாதிப்பால் சிகிச்சை பெற வருபவர்களுக்கு, சிறுநீரக பரிசோதனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஆரம்ப நிலையிலேயே சிறுநீரக பாதிப்பை கண்டறிய முடியும். ஆயிரத்து 250 இடங்களில் நடைபெற்ற வருமுன் காப்போம் முகாம் வாயிலாக மாநிலம் முழுவதும் 15 லட்சம் பேர் பயனடைந்தனர்.
இதயம் காப்போம் திட்டத்தின் மூலம் கூட்டு மருந்து பெட்டகம் துணை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருப்பு வைக்கப்படும். மாரடைப்பு அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு இந்த மருந்து வழங்கப்படும். இன்னும் 15 நாட்களில் ஆயிரத்து 25 மருத்துவர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். அரசு நிர்வாகம் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்று வருகிறது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி பிரான்ஸ் பயணம்... 26 ரபேல் விமானங்கள் கொள்முதல்? பிளான் என்ன?