ஜவ்வரிசி மூட்டைகளை லாரிகளில் ஏற்றிச்சென்றபோது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் சேகோசர்வ் தொழிலாளி ஒருவர் மரணமடைந்தார். ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில் உயிரிழந்த தொழிலாளிக்கும், காயமடைந்த தொழிலாளர்களுக்கும் இழப்பீடு கேட்டு, நேற்று (ஏப்ரல் 26) சேலம் குரங்குச்சாவடி பகுதியில் உள்ள சேகோசர்வ் நிறுவனத்தை நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய், காயமடைந்த தொழிலாளர்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று முழக்கமிட்டனர்.
இது குறித்து சேலம் ஜில்லா சுமைதூக்கும் தொழிலாளர் சங்கப் பொதுச்செயலாளர் வெங்கடபதி கூறுகையில், "கடந்த 24ஆம் தேதி சேகோசர்வ் குடோனிலிருந்து மல்லூர் பகுதியில் உள்ள சேமிப்புக் கிடங்கிற்கு லாரியில் ஜவ்வரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு தொழிலாளர்கள் சென்றனர்.
அப்போது, சந்தியூர் அருகே லாரியானது விபத்தில் சிக்கியது. விபத்தில் 6 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். அதில், ஹரிபாஸ்கர் என்பவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். மேலும் ஐந்து தொழிலாளர்கள் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
உயிரிழந்த தொழிலாளி ஹரிபாஸ்கர் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் சேகோசர்வ் நிர்வாகம் இழப்பீடாக வழங்க வேண்டும், படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்றுவரும் தொழிலாளர்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், இதனை நிர்வாகம் செய்யத் தவறினால் தொழிலாளர்களின் போராட்டம் மேலும் தீவிரமடையும்" என்று தெரிவித்தார்.