சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள வீரகனூர் பகுதியைச் சேர்ந்த மாணவிகள் ஜெனிலியா, ஜெனிபர். இருவரும் வீரகனூர் பகுதியில் உள்ள காமராஜ் தனியார் மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு படித்து வருகின்றனர். மாணவிகளின் தாயார் அண்மையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனையடுத்து இருவரையும் மாணவிகளின் தந்தை கவனித்து வருகிறார்.
குடும்ப வறுமையின் காரணமாக மாணவிகளுக்கு தனியார் பள்ளியில் கல்விக் கட்டணம் செலுத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவிகளின் தந்தை பள்ளி நிர்வாகத்திடம் எடுத்துக் கூறியும்; எந்தப் பலனும் அளிக்கவில்லை. கல்விக் கட்டணம் கட்டாததால் பள்ளி நிர்வாகம், இரண்டு மாணவிகளையும் நீக்கம் செய்து மாற்றுச் சான்றிதழ் கொடுத்து அனுப்பிவிட்டது.
பள்ளிக்குச் செல்லாமல் மாணவிகள் இருவரும் வீட்டில் இருப்பதைக்கண்டு, மனமுடைந்த தந்தை செய்வதறியாது திகைத்து வருகிறார். மாணவிகளுக்கு உதவி செய்ய யாரும் முன் வராத நிலையில், மாணவிகள் இருவரும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்வி உதவி கேட்டு கோரிக்கை மனு அளித்தனர்.
இவர்களது மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் மாணவிகளின் எதிர்காலத்திற்கு விளக்கொளியாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 39 ஆண்டுகளுக்குப் பிறகு, பயிற்சிப் பள்ளியில் பெண் காவலர்கள் சந்திப்பு!