சேலம்: நேற்று சேலம் மாவட்டம் எடப்பாடி - சங்ககிரி பிரதான சாலையில் உள்ள கோழிப்பண்ணை பேருந்து நிறுத்தம் அருகே, தனியார் கல்லூரி பேருந்தும் தனியார் பேருந்து ஒன்றும் கண்ணிமைக்கும் நேரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் சிக்கியவர்கள் எழுப்பிய அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள், காயமடைந்தவர்களை மீட்டனர். பின்னர் இந்த பேருந்து விபத்து குறித்து தகவல் அறிந்த எடப்பாடி, சங்ககிரி, கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதியில் இருந்து விரைந்த ஆம்புலன்ஸ் வாகனங்களில் அவர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.
இந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் உள்பட 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களில் 15 நபர்கள் சங்ககிரி அரசு மருத்துவமனையிலும் சேலம் அரசு மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த விபத்திற்கு தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுனர் சற்றும் வேகத்தை குறைக்காமல், முன்னால் சென்ற வாகனங்களை முந்தி செல்ல முயன்றதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.
அதேநேரம், இதில் பலத்த காயமடைந்த தனியார் பேருந்து ஓட்டுனர் எடப்பாடி பகுதியைச் சேர்ந்த அருணாசலம் (42), கல்லூரி பேருந்து ஓட்டுனர் மேட்டூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (32) மற்றும் இருப்பாளி பகுதியைச் சேர்ந்த சின்ன கண்ணு (60) ஆகியோர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதற்கிடையில், தனியார் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகிய நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள் வெளியாகின. அதில், எதிரே வந்த பேருந்து மின்னல் வேகத்தில் மோதியதும், ஓட்டுநர் இருக்கையில் இருந்து தூக்கி வீசப்பட்டு, பயணிகளும் திசை தெரியாமல் தூக்கி வீசப்பட்டு, அவர்கள் காப்பாற்றுங்கள் என அலறுவதுமாக அந்த வீடியோ பதிவு இருக்கிறது.
இவ்வாறு கிடைக்கப்பெற்ற இந்த சிசிடிவி காட்சியை ஆதாரமாக வைத்து, கொங்கணாபுரம் போலீசார் இந்த பேருந்து விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கோத்தகிரி குடியிருப்பு பகுதியில் வளர்ப்பு பிராணியை வேட்டையாடும் சிறுத்தை - சிசிடிவி காட்சிகள் வெளியாகின