சேலம்: ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியிடம் சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்து தனியார் மருத்துவமனையில் விற்பனை செய்த விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான புகாரின் அடிப்படையில் ஈரோடு, சேலம், ஓசூர், கேரளா உள்ளிட்டப் பகுதிகளில் இயங்கிவரும் மருத்துவமனைகளில் மருத்துவக் குழுவினர் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின் வாயிலாக கருமுட்டை எடுப்பதற்கு எந்த ஒரு விதிமுறையும் பின்பற்றப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளை மூட மருத்துவத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் சேலத்தில் இயங்கி வரும் தனியார் கருத்தரித்தல் மருத்துவமனை கடந்த மாதம் ஜூன் 15ஆம் தேதி மூடப்பட்டது.
மருத்துவமனையில் ஆறு நோயாளிகள் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் இரண்டு வார காலம் அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. புதிதாக நோயாளிகள் சிகிச்சைப்பெற அனுமதிக்கப்படவில்லை. தற்போது சிகிச்சைப்பெற்று வந்த நோயாளிகள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், சேலம் மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் நெடுமாறன் தலைமையிலான அலுவலர்கள் இன்று தனியார் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் சிகிச்சை மையம், ஸ்கேன் சென்டர், ஆவணப்பாதுகாப்பு வரை உள்ள 8 அறைகளை முழுமையாக மூடி சீல் வைத்தனர்.
பின்ன சீல் வைத்த உடன் மருத்துவமனையின் சாவியை மருத்துவமனையின் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து சேலம் மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் நெடுமாறன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 'கருமுட்டை விவகாரத்தில் சேலம் தனியார் மருத்துவமனை முழுமையாக மூடி சீல் வைக்கப்பட்டது.
இந்த தனியார் மருத்துவமனையில் ஆறு நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கூடுதல் அவகாசமாக இரண்டு வாரங்கள் கொடுக்கப்பட்டன. தற்போது நோயாளிகள் குணமடைந்து அவரவர் வீடு திரும்பி வருகின்றனர். எனவே மருத்துவமனையில் உள்ள எட்டு அறைகளும் முழுமையாக மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன’ என்றார்.
இதையும் படிங்க:அரும்பாக்கம் நகைக்கொள்ளையில் தீவிரமடையும் போலீஸாரின் விசாரணை