சேலம் செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவர் டவுன்பகுதியில் பல ஆண்டுகளாக வெள்ளி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் சிவகுமாருக்கு அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணராவ், சீனிவாசன் ஆகிய இருவரும் தொழில் ரீதியாக ரூ. 1.20 கோடி பணம் கொடுக்க வேண்டிருந்தது. பணத்தை திரும்ப கொடுக்கக்கோரி பலமுறை சிவகுமார், இருவரிடமும் கேட்டுள்ளார்.
ஆனால் அவர்கள் இருவரும் பணத்தை கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த அவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். புகார் கொடுத்தும் ஆறுமாதங்கள் கடந்தும் காவல்துறை சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் வியாபாரி சிவக்குமார் கூறுகையில், "கிருஷ்ணராவ், சீனிவாசன் ஆகிய இருவரும் ரூ.1.20 கோடி கடனாக வாங்கினர். ஒராண்டாகியும் இதுவரை பணம் திரும்பி வரவில்லை. பணத்தை வாங்கி மோசடி செய்த இருவர் மீது மாவட்ட காவல்துறையில் புகார் அளித்தேன். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தற்கு, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது மனஉளைச்சலில் இருக்கிறேன். இனிமேலும் பணத்தை பெற்ற தர காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வேன்" என்றார்.