சேலம்: மத்திய அரசின் 'செயில் ரிப்ரேக்டரி நிறுவனம்' (Sail Refractory Company), சேலம் மாமாங்கம் பகுதியில் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் மெக்னீசியம் எனப்படும் வெல்லைக் கல்லை வெட்டி எடுத்து, சேலம் உருக்காலைக்கு அனுப்பி வருகிறது.
இந்த செயில் ரிப்ரேக்டரி நிறுவனத்தில் ஏராளமான தொழிலாளர்கள், ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருகின்றனர். இங்கு சம வேலைக்குச் சம ஊதியம் வழங்க வேண்டும், ஆலையில் பணிபுரியும் போது பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்.
மாதம் 26 நாட்கள் கட்டாயம் பணி வழங்க வேண்டும், என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் இன்று ஏழாவது நாளாகத் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசு நிறுவனம் தங்களுக்கு நேரடியாகப் பணி வாய்ப்பு வழங்க வேண்டும், தனியாருக்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தை உடனடியாக கைவிட வேண்டும், 'டன் வேஜ்' முறையைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் உள்ளடக்கி இந்த வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக நிறுவன அதிகாரிகள், தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் சுமூகத்தீர்வு எட்டவில்லை என்பதால் தங்களது போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தொழிலாளர்கள் மறுவாழ்வு முன்னேற்ற சங்கத்தின் கௌரவ தலைவர் பாலமுரளி கூறுகையில், “தொழிலாளர்கள் தரப்பில் இருந்து பலமுறை கோரிக்கைகள் விடுத்தும் அதை நிறைவேற்ற நிர்வாகம் செவிசாய்க்க மறுத்து வருகிறது.
இந்த நிலையில் செயில் நிர்வாக உயர் அதிகாரிகள் சித்ரா மற்றும் அர்ஜுனன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். அதில் எங்களது கோரிக்கையை நிர்வாகம் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தனர். அதே நேரத்தில் சேலம் இரும்பாலை செயல் இயக்குநர் பாண்டே அவர்களிடம் நேரில் பேச வேண்டும்.
அவர் என்ன முடிவு சொல்கிறாரோ அதன்படி தான் செயல்பட முடியும் என்றும் கூறிவிட்டுச் சென்றனர். ஆனால் அங்கு எந்த முடிவும் எட்டப்படவில்லை. பாண்டே, ஒப்பந்த விஷயத்தில் எந்த தொழிலாளர்களும் தலையிட உரிமையில்லை. பழைய நிலையே தொடரும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்று தெரிவித்ததாகத் தெரிகிறது.
இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். எத்தனை நாட்கள் ஆனாலும் தொழிலாளர்களின் உரிமைக்காகத் தொடர்ந்து நாங்கள் செயில் நிர்வாக வளாகத்தில் பல்வேறு கட்ட போராட்டங்களை இரவு பகலாக முன்னெடுப்போம்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்!