சேலம் மாவட்டம், எடப்பாடி அருகேயுள்ள பூலாம்பட்டி காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை மின்நிலையம் மூலம் மின்சாரம் தயாரிக்கும்படி, தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால், அந்தப் பகுதிகளில் காவிரி ஆறு பரந்து விரிந்து காணப்படுகிறது.
இதன் காரணமாக காவிரி ஆற்றின் குறுக்கே சேலம் மாவட்டத்திற்கும் ஈரோடு மாவட்டத்திற்கும் இடையேயான விசைப்படகு போக்குவரத்து நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, மார்ச் மாதம் 21ஆம் தேதி முதல் விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மே மாதம் கதவணை மின்நிலையம் பராமரிப்புப் பணிக்காக, காவிரி ஆற்றில் தேக்கி வைக்கப்பட்ட நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டது. தற்போது மீண்டும் நீர் தேக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, ஊரடங்கு உத்தரவில் கட்டுப்பாடுகள் தளர்வுசெய்யப்பட்டுள்ளதால் பூலாம்பட்டியில் விசைப்படகு போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது. தற்போது பூலாம்பட்டி படகுத்துறையில் இருந்து ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டைக்கும், அங்கே இருந்து பூலாம்பட்டிக்கும் பயணிகள் பயணம் செய்ய அமனுதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஆனாலும் பொதுமக்கள் கூட்டம் குறைவாக இருப்பதால், படகு சவாரி தொழிலில் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக விசைப்படகு உரிமையாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.