சேலம் மாவட்டம், காட்டூரை சேர்ந்த முறுக்கு வியாபாரி கணேசன் என்பவர், கடந்த 15 நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் கதிர்வேல் உட்பட ஐந்து பேரை காவல் துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு கதிர்வேலை கைது செய்த காரிப்பட்டி காவல் துறையினர், விசாரணைக்காக கணேசன் கொலை செய்யப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது, கதிர்வேல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் காவல் ஆய்வாளர் சுப்பிரமணியம், உதவி ஆய்வாளர் துரை ஆகியோரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர்கள் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஆய்வாளர் சுப்பிரமணியம் கதிர்வேலை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே கதிர்வேல் உயிரிழந்தார். இதனையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை காவல்துறையினர் தேடிவந்தனர்.
இதனையடுத்து முறுக்கு வியாபாரி கணேசன் கொலை வழக்கில் சம்மந்தமில்லாத தன்னை காவல்துறையினர் தேடி வருவதாகக் கூறி சேலம் மாவட்டம், வீராணம், அல்லிக்குட்டையை சேர்ந்த கார்த்திக் என்பவர் நேற்று நாமக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை வரும் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் நடந்த உடல் பரிசோதனைக்கு பின்னர் கார்த்திக், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.