தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் தமிழக முதல்வரான எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டமான சேலத்திலேயே இதனை முறையாக கடை பிடிக்கப்படாமல் இருந்து வருகின்றனர்.
சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்து வருவதாக மாநகராட்சி அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சேலம் மாநகர நல அலுவலர் பார்த்திபன் தலைமையிலான அதிகாரிகள் அப்பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இச்சோதனையில், ரூ.5 லட்சம் மதிப்பிலான ஒரு டன் அளவுடைய தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மாநகரப் பகுதியில் அமைந்துள்ள ஒரு கடையில் மட்டுமே ஒரு டன் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
தமிழக முதல்வரின் சொந்த மாவட்டத்திலேயே அரசின் உத்தரவை கடைபிடிக்காதது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.