சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆயுர்வேத மசாஜ் சென்டர்கள் இயங்கிவருகின்றன. இந்த சென்டர்கள் அனைத்தும் உரிமம் பெறாமல் இயங்கி வந்ததாகவும் ஒரு மணி நேரத்திற்கு 1,000 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின.
கடந்த சில மாதங்களாக, இந்த மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் நடைபெறுவதாக சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் அனைத்து மசாஜ் சென்டர்களிலும் ஆய்வு நடத்த அவர் உத்தரவிட்டார். இதுதொடர்பாக ஆய்வு மேற்கொள்ள சேலம் மாநகர நுண்ணறிவுப் பிரிவு காவலர்கள் அடங்கிய தனிப்படை ஒன்றும் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், திடீரென நேற்று அனைத்து மசாஜ் சென்டர்களும் காவல் துறையினரால் சோதனை செய்யப்பட்டது. அப்போது நாற்பதுக்கும் மேற்பட்ட மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது. அங்கிருந்த பிகார், கொல்கத்தா, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த 80 பெண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் காவல் நிலையங்களுக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, பின் அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.
இந்த மசாஜ் சென்டர்களை நடத்தி வந்த உரிமையாளர்கள் மீதும் அவற்றை நடத்த வீட்டை வாடகைக்குக் கொடுத்த வீட்டு உரிமையாளர்கள் மீதும் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்திருப்பதாக காவல் துறை அலுவலர்கள் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க : 'தேர்வு என்று வந்தால் 2 பெண்கள் தற்கொலைசெய்வது வழக்கம்தான்!' - சொன்னவர் அர்ஜுன் சம்பத்