சேலத்தில் மரவள்ளிக் கிழங்கு விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் முத்தரப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்திருந்தனர். அதன்படி, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ராமன் தலைமையில் முத்தரப்புக் கூட்டம் நேற்று (பிப். 20) நடைபெற்றது.
இதில், மரவள்ளிக் கிழங்கு விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள், சேகோசர்வ் நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது விவசாயிகள் தரப்பில், மரவள்ளிக் கிழங்கு டன் ஒன்றுக்கு 13 ஆயிரம் வழங்க வேண்டும், கள்ளச்சந்தையில் ஜவ்வரிசி விற்பனையைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மேலும், விவசாயிகளுக்கும் ஆலைக்கும் இடையே தரகர்கள் மூலமாக விற்பனை செய்வதை தவிர்த்து நேரடி கொள்முதல் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதனால், விவசாயிகள், இடைத்தரகர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, அனைத்துத் தரப்பு கருத்துக்களையும் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், விவசாயிகள் பயனடையும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
பின்னர், மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கரும்பு விவசாயிகளுக்கு அரசு சார்பில் சர்க்கரை ஆலைகள் உள்ளது போல, அரசு சார்பாக ஜவ்வரிசி ஆலைகள் உருவாக்கி மரவள்ளிக் கிழங்கு விவசாயிகளைக் காக்க வேண்டும். மரவள்ளிக் கிழங்குக்கு உரிய விலை நிர்ணயம் செய்யும் வகையில் சேகோசர்வ் ஆலையில், விவசாயிகளையும் உறுப்பினராகச் சேர்க்க வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனில் விவசாயிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஆலையை உருவாக்குவோம்" என்றனர்.