சேலம் மாவட்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. குறிப்பாக நேற்று முன்தினம் இளம்பிள்ளையில் அதிக பட்சமாக 66 மில்லி மீட்டர் மழை பதிவானது. கனமழையால் இளம்பிள்ளையில் உள்ள ஏரி நிரம்பி , ஏரியின் கரை உடைந்து, பெருமாகவுண்டம்பட்டி பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளநீர் சூழ்ந்தது.
அப்பகுதியில், சுமார் 300க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கழிவுநீர் கலந்த தண்ணீர் புகுந்ததால் குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகினர். தங்களது அன்றாட தேவைக்கு பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களும் தண்ணீரில் மூழ்கியதால் இரவு உணவு கூட உண்ண முடியாத நிலை ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். திடீரென வீடுகளுக்குள் வெள்ளநீர் சூழ்ந்ததால் நாற்காலி, கேஸ் சிலிண்டர், கட்டில் மெத்தை என அனைத்துப் பொருட்களுமே தண்ணீரில் நனைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது.
தண்ணீர் பெருக்கெடுத்து வந்ததால் செய்வதறியாது திகைத்த குடியிருப்புவாசிகள் தங்களது உடைமைகள் அனைத்தையும் வீட்டிற்குள் வைத்து விட்டு வெளியேறினர். ஏரியில் ஏற்பட்ட உடைப்பு குறித்து தகவல் அறிந்த வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த் துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளை துரிதமாக மேற்கொண்டனர். சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஏரியில் உடைப்பு ஏற்பட்ட பகுதி அடைக்கப்பட்டது. மேலும் தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.