சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் பேளூர் அடுத்த பனைமடல் அருகே உள்ள கணேசபுரம் கணவாய்க்காடு பாலத்திற்கு அடியில் இரத்த வெள்ளத்தில் ஒருவர் இறந்துகிடப்பதாக ஏத்தாப்பூர் காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஏத்தாப்பூர் காவல்துறையினர், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து காவலர்கள் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயை வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், சதாசிவத்தை கொலை செய்துபாலத்திற்கு அடியில்வீசியதாக பவித்ரா என்ற பெண்ணும், அவரது மாமியார் மலர் ஆகியோர் ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இருவரிடமும் போலீசார் விசாரணை செய்ததில் கொலையானவர் வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்த ஜே.சி.பி, ஒட்டுனர் சதாசிவம் என்பது தெரியவந்தது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள வெள்ளாளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெரியண்ணன். இவரது மகன் சதாசிவம். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சதாசிவம் ஜேசிபி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு, அதேபகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பவரின் மனைவி பவித்ராவுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் திருமணம் தாண்டிய உறவாக மாறியுள்ளது. இதனையறிந்த ரஞ்சித் மற்றும் அவரது குடும்பத்தார் சதாசிவம் - பவித்ரா இருவரையும் எச்சரித்துள்ளனர்.
இதையடுத்து நேற்று இரவு சதாசிவம் பவித்ராவை தேடி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது பவித்ராவுடன் தனிமையில் இருந்ததை பார்த்த அவரது கணவர் மற்றும் மாமியார் இருவரையும் மீண்டும் கண்டித்துள்ளனர். அப்போது சதாசிவம் திருமணத்தை தாண்டிய உறவை கைவிட மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ரஞ்சித், அவரது தாய் மலர் இருவரும் கட்டையாலும் அரிவாளாலும் சதாசிவத்தை சராமாரி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே சதாசிவம் உயிரிழந்தார்.
இதனையடுத்து ரஞ்சித், இறந்துபோன சதாசிவத்தின் உடலை பாலத்திற்கு அடியில் போட்டுவிட்டு தலைமறைவாகியுள்ளதாகவும், பின்னர் பயத்தால் பவித்ரா மற்றும் மலர் காவல் நிலையத்தில் சரணடைந்து விட்டதாகவும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: வரம்பு மீறிய காதல்... 9 பேர் கொடூர கொலை - கொலையாளி பிடிபட்டது எப்படி?