சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அடுத்த கோம்பைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். இவரின் மகள் ஜெயவர்த்தினி. சேலம் அரசு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பவருக்கும் நட்பு ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் காதலித்து வந்த நிலையில், ஜெயவர்த்தினி கார்த்தியை விரும்புவதாகவும் அவரைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்றும் பெற்றோரிடம் கூறினார்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஜெயவர்த்தினியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், பெற்றோர் எதிர்ப்பை மீறி ஜெயவர்த்தினியும், கார்த்திக்கும் சேலத்தில் சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு ஒன்றை ஜெயவர்த்தனி அளித்தார். அதில், நாங்கள் இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டோம். இதனால், எங்களது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே திருமணத்திற்கு பிறகு அமைதியான வாழ்க்கையை வாழ காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் இளமதி - செல்வன் சாதிமறுப்பு சுயமரியாதை திருமணம் நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கொரோனா எதிரொலி: ஆட்சியர் அலுவலகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்!