சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட நடுவலூர், கிருஷ்ணாபுரம், கூடமலை உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனையாகி வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனை விற்பனை செய்வோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் தயக்கம் காட்டுவதாக பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
நடுவலூர் பெரியாயி அம்மன் கோயில் அருகே பிரபல கள்ளச்சாராய வியாபாரி, சாக்கு மூட்டையில் சாராய பாக்கெட்டுகளை வைத்துக்கொண்டு 24 மணி நேரமும் விற்பனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இப்பகுதியில் காவல் துறையினர், மதுவிலக்கு போலீசார் ஆகியோர் இருந்தும் கள்ளச்சாராய விற்பனையை தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
அதேபோல், கூடமலை, கிருஷ்ணாபுரம் பகுதிகளிலும் கள்ளச்சாராயம் அதிகளவில் விற்பனையாகி வருவதாகக் கூறப்படுகிறது. 24 மணி நேரமும் கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வருவதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. சாராயத்தைக் குடித்துவிட்டு போதையில் பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் குடிமகன்கள் அத்துமீறலில் ஈடுபடுவதாகவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவதாகவும் சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் உடனடியாக சேலம் மாவட்ட காவல்துறையினரும், மதுவிலக்கு போலீசாரும் உரிய நடவடிக்கை எடுத்து கள்ளச்சாராய விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.