சேலம் மாவட்டம், இளம்பிள்ளையைச் சுற்றியுள்ள பகுதிகளில் விசைத்தறி தொழில் பிரதானமாக நடைபெற்று வருகிறது. கரோனா தொற்று பொது ஊரடங்கு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக ஜவுளித் தொழில், மிகவும் நலிவடைந்து கடும் நெருக்கடியில் உள்ளது. இதனால் இளம்பிள்ளை பகுதி ஜவுளி வியாபாரிகள் கடும் பொருளாதார நெருக்கடியால் தவித்து வருகின்றனர்.
அபராதம் கட்டாத ஜவுளிக் கடை முன் குப்பையைக் கொட்டி பேரூராட்சி அராஜகம்! இந்த நிலையில் இளம்பிள்ளை பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் கரோனா தொற்று பரவாமல் இருக்க, தேவையான விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. நேற்று(செப்.23) இளம்பிள்ளை கே.வி.பி தியேட்டர் சாலையில் உள்ள ஸ்ரீநிவாசன் என்பவருக்குச் சொந்தமான சிறிய ஜவுளி விற்பனைக் கடையில் சமூக இடைவெளியைப் பின்பற்றவில்லை எனக் கூறி, பேரூராட்சி ஊழியர்கள் ரூ.500 அபராதம் கட்ட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். கரோனா அபராதம் கட்டாத ஜவுளிக் கடை முன் குப்பையைக் கொட்டிய பேரூராட்சி ஊழியர்கள்! இதற்கு கடை உரிமையாளர் தான் ஒருவர் மட்டும் கடையில் இருக்கும் நிலையில் அபராதம் ஏன் கட்ட வேண்டும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பேரூராட்சி ஊழியர்கள் இது மாவட்ட ஆட்சியர் உத்தரவு, அபராதம் கட்டினால் மட்டுமே கடை நடத்த முடியும் என எச்சரித்துள்ளனர்.
ஆனால், அபராதம் கட்ட அவர் மறுத்ததால், ஆத்திரமடைந்த பேரூராட்சி ஊழியர்கள் தாங்கள் தயாராக கொண்டு வந்த குப்பைகளை வண்டியில் இருந்து எடுத்து கடையின் முன்பு கொட்டி விட்டுச் சென்றுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர் செய்வதறியாமல் திகைத்து உள்ளார். இந்தக் காட்சிகள் கடையின் முன்பு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது சிசிடிவி கேமரா காட்சிகள் சேலம் பகுதியில் வைரலாகப் பரவி வருகிறது.
இதுகுறித்து இளம்பிள்ளை பகுதியில் ஜவுளி வியாபாரிகள் கூறுகையில், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பேரூராட்சி நிர்வாகத்தினர், சுகாதாரத்துறையினரும் தனித்தனியாக வந்து கரோனா நடைமுறைகளை பின்பற்றவில்லை என ரூ.200 முதல் ரூ.500 வரை கட்டாய வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். சில நேரங்களில் அபராதத் தொகை வசூல் செய்யும் பணத்திற்கு ரசீது கூட வழங்குவதில்லை. இதுகுறித்து உயர் அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தெரிவித்தனர்.