சேலம்: தேனி மாவட்டம், பழனிசெட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் பி.மிலானி. இவர் தேனி மாவட்டம் திமுக முன்னாள் மாணவர் அணி அமைப்பாளராக இருந்துள்ளார். தற்போது தேனி வட்டாரத்தில் அரசியல் பிரமுகராகவும் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், இவர் அண்மையில் சேலம் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1க்கு ஆன்லைன் மூலம் புகார் மனு ஒன்றை அனுப்பி உள்ளார்.
அந்த மனுவில், “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவுகள் 33 மற்றும் 33 ஏ-இன் அடிப்படையில் தாக்கல் செய்த வேட்பு மனுவின் பிரமாணப் பத்திரத்தில் ஆண்டு வருமானம், அசையா சொத்துக்கள் மற்றும் கடன் விவரங்கள் குறித்து தவறான தகவலைத் தெரிவித்துள்ளார். எனவே, இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, இந்த ஆன்லைன் புகார் மனு குறித்து விசாரித்த சேலம் குற்றவியல் நடுவர் எண் - 1 நீதிபதி கலைவாணி, “இந்த மனு குறித்து மத்திய குற்றப்பிரிவு, வழக்கை நேர்மையாக விசாரித்து, போதிய முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். மேலும், இது குறித்த அறிக்கையை மே 26ஆம் தேதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். வழக்கு விசாரணையின்போது மனுதாரர் ஆஜராகையில், அவருக்கு போதிய பாதுகாப்பை வழங்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஜூன் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு!