சேலம்: சேலம் மாநகர் கிச்சிப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட எஸ்.எம்.சி. காலனியைச் சேர்ந்த பிரபல ரவுடி செல்லதுரையை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த 20 பேர் சேர்ந்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.
இந்தக் கொலை வழக்கில் 20-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று (செப். 6) நள்ளிரவு பாரதி நகருக்கு வந்த, அடையாளம் தெரியாத பதினைந்திற்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் வந்து செல்லதுரையின் ஆதரவாளர்கள் சிலரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டினர்.
இதில், படுகாயமடைந்த நான்கு பேர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், மக்கள் அந்தப் பகுதியில் திரண்டதால், கொலைவெறித் தாக்குதல் நடத்திய 15 மேற்பட்டோரும் கத்தி, வீச்சரிவாளை போட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.
இதனையடுத்து, சாலையில் ரத்தவெள்ளத்தில் கிடந்த மணிகண்டன், பிரதாப், வினோத், 17 வயது சிறுவன் உதயகுமார் ஆகிய நான்கு பேரையும் அப்பகுதியினர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், வினோத் இன்று (செப்டம்பர் 7) காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
ரவுடி கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவரும் கிச்சிப்பாளையம் காவலர்கள், கத்தி, வீச்சரிவாளைக் கைப்பற்றியுள்ளனர்.
15-க்கும் மேற்பட்டோரைத் தேடிவருகின்றனர். நள்ளிரவில் நடைபெற்ற இச்சம்பவம் பாரதி நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் 3 ரவுடிகள் கைது