சேலம் மாவட்டம் அடுத்த கருக்கல்வாடி பகுதியில் நேரு நகரைச் சேர்ந்தவர் ரஜினி பழனிசாமி. இவர் ரஜினியின் தீவிர ரசிகர் என்பதால் அவரது பெயரை தன்பெயரின் முன்பாக சேர்த்துக் கொண்டார்.
இவர் சேலம் அழகாபுரம் காவல் துறை அலுவலகத்திற்கு எதிரில் உள்ள கால்டாக்சி நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பகுதியில் உள்ள காவல்துறை அலுவலகத்தில் போலீஸ் நண்பர்கள் குழுவில் இடம் பெற்றிருந்தார்.
சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட புகாரில், காவல் துறையினர் அப்போது அவரை போலீஸ் நண்பர்கள் குழுவிலிருந்து நீக்கினர். இருந்தபோதும், காவல் துறையினருக்கு அவ்வப்போது தகவல் கொடுத்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் காரை எடுப்பதற்காக புதிய பேருந்து நிலையத்திலிருந்து நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது, அத்வைத ஆஸ்ரம சாலையில் உள்ள தனியார் எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவமனை அருகே மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் ரஜினி பழனிசாமியை வழிமறித்து வெட்டியது.
அங்கிருந்து உயிருக்குப் பயந்து ஓடிய அவரை, அந்த மர்ம கும்பல் விடாமல் துரத்திச் சென்று வெட்டியது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டனர். ரஜினி பழனிசாமி உயிருக்குப் பயந்து அருகில் உள்ள சாக்கடை கால்வாய்க்குள் குதித்து தப்பினார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு அழகாபுரம் காவல் துறையினர் விரைந்தனர். காவல் துறையினரை கண்ட மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
ரஜினி பழினிசாமியை மீட்ட காவல் துறையினர், அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதற்கிடையில், தன்னை வெட்டிய காட்சிகளை மொபைலில் விடியோ பதிவுசெய்து வாட்ஸ்அப் மூலம் ரஜினி பழனிசாமி பரப்பியுள்ளார்.
அந்த விடியோ மூலம் மர்ம கும்பலை அடையாளம் கண்டு, அவர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில், ரஜினி பழனிசாமி முகநுாலில், நாம் தமிழர் கட்சியின் சீமானை விமர்சித்து கருத்து பதிவிட்டுள்ளார். மேலும், காவல் துறையினருக்கு பல தகவல்களையும் கொடுத்து வந்துள்ளார். இதனால், இந்த கொலைவெறி தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாக தெரியவந்துள்ளது.