தமிழ்நாட்டில் கள் இறக்குவதற்கு அனுமதி வழங்கிட கோரி பல்வேறு போராட்டங்கள், துண்டு பிரசுரங்கள் வழங்கி போராட்டம் நடைப்பெற்றுவருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் 4 ரோடு பகுதியில் தமிழ்நாட்டில் கள் தடையை நீக்க வலியுறுத்தி கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் இயற்கை விவசாயிகள் சங்கத்தின் தலைவர் தங்கராஜ் கலந்துகொண்டு போராட்டத்திற்கு ஆதரவு அளித்தார். அதனைத்தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தபால்களை தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்பி, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, "தமிழ்நாட்டில் கள் இறக்குவதும் பருகுவதும் அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உரிமை. உணவு தேடும் உரிமை. தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இந்த உரிமையை மீண்டும் மக்களுக்கு வழங்க வேண்டும். கள் மீதான தடையை இந்த அரசு நீக்க வேண்டும். இதனை வலியுறுத்தி இன்று (பிப். 5) முதலமைச்சருக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டோம்.
முதலமைச்சர் அரசியலமைப்பு சட்டத்தை மதித்து தமிழ்நாட்டில் கள் இறக்குவதற்கான தடையை நீக்கி அனுமதி வழங்கிட வேண்டும். அப்படி கொடுக்காவிட்டால் வரும் மார்ச் மாதம் 13ஆம் தேதி ஈரோட்டில் மிகப்பெரிய அளவிலான கள் விடுதலை மாநாட்டை நடத்த இருக்கின்றோம். அந்த மாநாடு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் மாநாடாக இருக்கும். வரும் தேர்தலில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை தீர்மானிக்கும் மாநாடாக இருக்கும்.
நாளை தடையை மீறி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் நரசிங்கனூர் பகுதியில் பனை மரங்களில் இருந்து கள்ளை இறக்கி விற்பது என நாங்கள் முடிவு செய்துள்ளோம். இந்த அரசு எங்கள் மீது நடவடிக்கை எடுத்தால் நாங்கள் கேட்க கூடிய ஒரே கேள்வி- அரசியலமைப்பு சட்டத்துக்கு கட்டுப்பட்டது மதுவிலக்கு சட்டமா அல்லது மதுவிலக்குச் சட்டத்திற்கு உட்பட்டது அரசியலமைப்பு சட்டமா என்பதுதான். இந்தக் கேள்விக்கு தமிழ்நாடு ஆட்சியாளர்கள் பதில் கூற முடியாது" என்றார்.
இதையும் படிங்க... மெரினா தள்ளுவண்டி வழங்கும் டெண்டரில் முறைகேடு! அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு!