யோகாசனத்தின் பயன்கள் மற்றும் ஃபீட் இந்தியா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் உலக சாதனை முயற்சிக்காக நாடு முழுவதும் உள்ள 390 தனியார் பள்ளியை சேர்ந்த ஒரு லட்சத்து 42 ஆயிரம் மாணவ-மாணவிகள் 15 நிமிடத்தில் 40 யோகாசனங்களை செய்து சாதனை படைக்கும் நிகழ்வு இன்று தமிழ்நாடு உட்பட 7 மாநிலங்களில் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக சேலம் குரங்குசாவடி பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற யோகாசன நிகழ்வில் 1174 பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு 15 நிமிடத்தில் 40 யோகாசனங்களை செய்து அசத்தினர். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா டெல்லி உள்ளிட்ட 7 மாநிலங்களில் 190 மையங்களில் நடைபெற்றது.
இந்த யோகாசன நிகழ்ச்சியில் அமர்ந்த நிலையில் 20 யோகாசனங்கள் நிற்கும் நிலையில் 20 யோகாசனங்கள் என மொத்தம் 40 யோகாசனங்களை பள்ளி மாணவ-மாணவிகள் செய்து முடித்தனர். பள்ளி மாணவ மாணவிகளின் இந்த முயற்சிகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டு நிகழ்ச்சி உலக சாதனை புத்தக ஒருங்கிணைப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் லலிதாகுமாரி கூறுகையில், "ஏழு மாநிலங்களிலுள்ள பல பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒரே நேரத்தில் உடற்பயிற்சி செய்து உலக சாதனை படைக்க முயன்றுள்ளனர். அதேபோல மற்றொரு சாதனையாக 1174 மாணவ மாணவிகள் வெறும் 15 நிமிடத்தில் 40 யோகசனங்களை செய்து மற்றொரு உலக சாதனை படைக்க முயன்றுள்ளனர்" என்றார்.
இதையும் படிங்க: இயற்கை உரம் தயாரிக்க எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்!