சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பேருந்தை, ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த இளையராஜா என்பவர் ஓட்டி வந்துள்ளார். அந்தப் பேருந்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ,வாழப்பாடி அடுத்த மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியைக் கடந்து பேருந்து வந்து கொண்டிருந்தபோது, பேருந்து ஓட்டுநர் இளையராஜாவிற்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, வலியால் பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம் இருந்த தடுப்புச் சுவரில் மோதியுள்ளது. மேலும், அதிவேகமாக வந்த பேருந்தின் சக்கரம் ஆக்சில் கட்டாகி, நிலை தடுமாறிய பேருந்து, தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
தற்போது அந்த தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பேருந்தில் பயணித்த பயணிகள் 6 பேர் படுகாயம் அடைந்ததாகவும், 10க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதில் 2 நபர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரித்துள்ளனர்.
இந்த சம்பவத்தைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக ஆம்புலன்ஸூக்கு தகவல் கொடுத்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த போலீசாரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு, படுகாயம் அடைந்த 6 பேரையும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதனிடையே இந்த பேருந்து விபத்திற்கு ஓட்டுநருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலிதான் காரணமா அல்லது அதிவேகமாக பேருந்தை இயக்கி வந்தது காரணமா என்பது குறித்து காரிப்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.