சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் மணியம்மாள் (50). கணவனை இழந்து தனியாக வசித்துவந்த இவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த இருசக்கர வாகன மெக்கானிக் சங்கர் (42) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மணியம்மாள், சங்கரிடம் 20 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியாகவும், அதில் 12 ஆயிரம் ரூபாய் வரை அவர் திருப்பித் தந்துள்ளதாகவும் தெரிகிறது.
இதையடுத்து மீதிப் பணத்தைத் திருப்பித் தருமாறு சங்கர் கேட்டுவந்துள்ளார். இதுதொடர்பாக கடந்த ஐந்து நாள்களுக்கு முன் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் சங்கர், மணியம்மாளைக் கழுத்தை நெறித்துக் கொலை செய்தார். இதையடுத்து சங்கரைக் கைதுசெய்த காவல் துறையினர், அவருக்குக் கரோனா கண்டறிதல் சோதனையையும் மேற்கொண்டனர். பரிசோதனை முடிவில் அவருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் சங்கர் நேற்று முன்தினம் (ஜூன் 20) மதியம் திடீரென மருத்துவமனையிலிருந்து தப்பியோடினார். உடனே மாவட்டக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சங்கரின் வீடு முன்பும், அவரது உறவினர்கள் வீடுகள் முன்பும் காவல் துறையினர் மாறுவேடத்தில் காத்திருந்துள்ளனர்.
அதன்படி பெத்தநாயக்கன் பாளையத்திலுள்ள தனது வீட்டிற்குச் சென்ற சங்கரை, காவல் துறையினர் மடக்கிப்பிடித்தனர். அதன்பின் உடனடியாக அவரை மீட்டு மீண்டும் சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர்.
இதையடுத்து அவரிடம் காவல் துறை நடத்திய விசாரணையில், சேலம் அரசு மருத்துவமனையிலிருந்து வெளியேறிய அவர் அங்கிருந்து ஆட்டோவில் சென்றதும், பின்னர் டாஸ்மாக் கடைக்குச் சென்று மது வாங்கி அருந்தியதும் தெரியவந்தது. தற்போது சங்கர் சென்று வந்த இடங்களில் யார் யாரைச் சந்தித்தார் என்பது குறித்து மாவட்டச் சுகாதாரத் துறை அலுவலர்கள் தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.