தமிழ்நாடு முழுவதும் நியாயவிலைக்கடையில் 1000 ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் இலவச பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, சேலம் பெரிய மோட்டூர் பகுதியிலுள்ள நியாய விலைக்கடையில் காலை முதல் பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. அப்போது இயந்திரம் பழுதானதால் பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்பட்டது.
இதனால் டோக்கன்கள் பெற்றவர்கள் நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்தனர். பெரிய மோட்டூர் பகுதியில் உள்ள நியாய விலைக்கடை தனியார் கட்டடத்தில் இயங்கி வருகிறது. அப்போது அங்கு வந்த கட்டட உரிமையாளரின் மகன் சிவா மதுபோதையில் அங்கிருந்த பெண்ணை தரக்குறைவாகப் பேசினார்.
இதனால் அங்கு திரண்டிருந்தவர்கள் ஆத்திரமடைந்து சிவாவைத் தாக்கினர். இது பற்றி தகவலறிந்த சூரமங்கலம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிவாவை அங்கிருந்து மீட்டனர்.
மது போதையில் பொங்கல் பரிசு வாங்க வந்த பெண்ணை தரக்குறைவான வார்த்தைகளை பேசி இளைஞர் தர்ம அடி வாங்கி சென்ற சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.