சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகேவுள்ள சொர்ணாம்பிகை தெருவில், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மலர்செல்வி (49) என்பவர் வசித்து வந்தார்.
இவரது கணவர் ராஜராஜன் கடந்த நான்கு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். மலர் செல்விக்கு மூன்று மகள்கள், வெங்கடேசன் என்னும் மகனும் உள்ளனர் . மூன்று மகள்களும் திருமணமாகி அவரவர் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர்.
வெங்கடேசனுடன் மலர்செல்வி வசித்து வந்தார். மேலும் மலர் செல்வி சோப்பு பவுடர்கள், மளிகை பொருள்களை வீடு வீடாக விற்பனை செய்து வந்தார். நேற்று இரவு வெங்கடேசன் வீட்டிற்கு வந்தபோது அவரது தாயார் மலர்செல்வி வீட்டில் இல்லை என்பது தெரியவந்தது.
இதனையடுத்து அதிர்ச்சியடைந்த அவர், அக்கம் பக்கம் தேடி பார்த்தார். எங்கும் மலர்செல்வி கிடைக்காத நிலையில் மீண்டும் வீட்டிற்கு வந்த அவர் சமையல் கூடத்தில் பார்த்துள்ளார்.
அங்கு அவரது தாயார் மலர்செல்வி தலையில் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். உடனே இது குறித்து அவர் சேலம் நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் குமார் தலைமையிலான காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்றூ(செப்டம்பர் 13) சந்தேகத்தின் அடிப்படையில் இளைஞர் ஒருவரை கைதுசெய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது, வீட்டில் மலர்செல்வி தனியாக இருப்பதையறிந்த இளைஞர், மலர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்துள்ளார். அப்போது, ஏற்பட்ட தகராறில் மலர்செல்வி கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
மேலும், மலர்செல்வி அணிந்திருந்தது கவரிங் நகைகள் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.