லைகா புரொடக்ஷனின் பிரமாண்டமான தயாரிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் படம் தர்பார்.
படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு இசை - அனிருத். ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன்.
படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பொங்கல் ஸ்பெஷலாக வரும் ஒன்பதாம் தேதி உலகம் முழுவதும் ’தர்பார்’ திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து இந்தப் படம் வெளியாகும் திரையரங்கு முன்பு ஹெலிகாப்டரில் மலர் தூவ அனுமதி வழங்குமாறு சேலம் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
தற்போது இந்த மனுவிற்கு அனுமதியளிக்ககூடாது என்று வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு சமூக அமைப்பினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில், போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியாக இருப்பதால் ஹெலிகாப்டர் வரும்போது அதை காண பொதுமக்கள் ஏராளமாக கூடுவார்கள். மேலும் திரையரங்கத்தைச் சுற்றி உயரமான செல்போன் கோபுரங்கள் அதிகளவில் இருப்பதால், விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று அதில் தெரிவித்திருந்தனர்.