சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சேலம் மாநகரில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்து பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
சேலம் மாவட்டத்தின் பச்சபட்டி, நாராயண நகர், எருமாபாளையம், கிச்சிபாளையம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து குமரகிரி ஏரிக்குச் செல்லும் பிரதான கால்வாய்கள் அடைக்கப்பட்டதால் மழைநீர் வெளியேற வழியின்றி தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து வெள்ளம் போல் சூழந்துள்ளது.
இதனால் பொதுமக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலை தொடர்கதையாகி வருவதால், இதற்கு நிரந்தர தீர்வு காண பலமுறை சம்பந்தப்பட்ட மாநகராட்சியிடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் முறையிட்டு எந்த நடவடிக்கையையும் அரசு மேற்கொள்ளாமல் மெத்தனப் போக்கைக் கடைபிடித்து வருகிறது.
பச்சப்பட்டி பகுதியில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதோடு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் விடிய விடிய தூங்காமல் தவித்தனர். தொடர்ந்து தண்ணீர் தேங்கி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் மாநகராட்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்து வெள்ள நீர் விரைவில் வெளியேற்றப்படும் என உறுதி அளித்ததையடுத்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறும்போது,"இது போன்ற அவல நிலையை ஒவ்வொரு மழை பெய்யும் போது சந்திக்கிறோம். மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரிக்கை வைக்கிறோம். ஆனால் எங்கள் பகுதியில் உள்ள தண்ணீரை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த முறையாவது சேலம் மாநகராட்சி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனை ஐசியூவில் சுதந்திரமாக உலா வரும் எலி!