சேலம் அரசு மருத்துவமனையில் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெற்று வருகின்றன. சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, வேலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இந்த மருத்துவமனையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், நாளுக்கு நாள் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தை பிறந்துள்ளது. நல்ல நிலைமையில் பிறந்த இந்த குழந்தைகளை தங்களால் வளர்க்க முடியாது என பெற்றோர்கள் விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் சேலம் அரசு மருத்துவமனைக்குச் சென்று மூன்று குழந்தைகளையும் பார்வையிட்டு அதன் உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலரை வரவழைத்து அவரிடம் மூன்று குழந்தைகளையும் ஒப்படைத்ததோடு குழந்தைகளை பாதுகாப்பாக பராமரிக்குமாறு கேட்டுக் கொண்டார். ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டபோது தாய் உள்ளத்தோடு குழந்தைகளை பெற்றுக் கொண்ட குழந்தைகள் நல அலுவலர் அவற்றை சிறந்த முறையில் பராமரிப்பதாக உறுதியளித்தார்.
இதையும் படிங்க: நகை கொள்ளை: மாட்டிக்கொள்ளாமல் இருக்க மிளகாய் பொடியை தூவிச்சென்ற திருடர்கள்...