நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் பொருளாதார இழப்புகளை கடுமையாக சந்தித்து வருகின்றனர். மேலும் கோயில் திருவிழாக்கள் இசை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இயங்கி வந்த பம்பை, உடுக்கை இசை கலைஞர்கள் தங்களின் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு தங்களுக்கு கரோனா நிவாரண நிதி உதவி அளித்து தங்களின் வாழ்க்கையை பாதுகாக்க வேண்டும் என்று சேலம் மாவட்ட தமிழ்த் தாய் கிராமிய வெண்கலப் பம்பை இசைக் கலைஞர்கள் நல சங்கத்தினர் இன்று( ஜூன் 23) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்த மனு குறித்து அச்சங்கத்தின் தலைவர் சக்திவேல் கூறுகையில்," ஊரடங்கு காலத்தில் எங்களின் தொழில் முழுவதுமாக முடங்கிப் போய் உள்ளதால் வருமானமின்றி தவிக்கிறோம்.
கிராமப்புற - நகர்ப்புறங்களில் எந்தவித கோயில் நிகழ்வுகளும் திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும் நடைபெறாமல் இருப்பதால் எங்களுக்கு வருமானம் இல்லை.
அதனால் எங்களைப் போன்ற கலைஞர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. குடும்பச் செலவுக்கும் குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகளுக்குக்கூட பணமின்றி தவித்து வருகிறோம்.
எனவே தமிழ்நாடு அரசு வணிக நிறுவனங்கள் செயல்பட தளர்வு அளித்துள்ளதைப்போல் ஏழை இசைக் கலைஞர்களின் தொழில் நடக்க ஊரடங்கில் தளர்வு அளித்து உதவிட முன் வர வேண்டும். மேலும் கரோனா நிவாரண நிதி அளித்து எங்களை பாதுகாக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.