சேலம்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவ பேரவை கூட்டம் நேற்று (டிச.17) சேலத்தில் நடைபெற்றது. பின்னர் அரசு ஊழியர்களின் பேரணி நடைபெற்றது. மாநில தலைவர் மு. அன்பரசு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வரவேற்பு குழு தலைவர் கோ. சுகுமார் வரவேற்றார். மாநாட்டை அகில இந்திய பொதுச்செயலாளர் ஏ.ஸ்ரீ.குமார் தொடங்கி வைத்து பேசினார்.
பேரவையை சமூக செயற்பாட்டாளர் மதுக்கூர் ராமலிங்கம் வாழ்த்தி பேசினார். சேலம் மாவட்ட தலைவர் நா.திருவரங்கன் வரவேற்றார். அறைகூவல் தீர்மானங்களை விளக்கி பொதுச்செயலாளர் ஆர்.செல்வம் பேசினார்.
அதனைத் தொடர்ந்து சிஐடியு மாநில தலைவர் அ.செளந்தரராஜன், மறக்கப்பட்டதும் மறுக்கப்பட்டதும் மறைக்கப்பட்டதும் என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். சேலம் மாவட்ட செயலாளர் சுரேஷ் இறுதியில் நன்றியுரையாற்றினார். மாநில பிரதிநிதித்துவ பேரவையில் 650-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பிறகு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் மு. அன்பரசு கூறுகையில், அரசு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, மாநிலளவில் அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் டிசம்பர் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது என்றார்.
அனைத்து மாவட்ட மையங்களில், வட்ட மாவட்ட மாநில நிர்வாகிகள் பங்கேற்கும் வகையில் 2023 ஜனவரி 9 முதல் 27 ஆம் தேதி வரை ஊழியர் சந்திப்பு மற்றும் உறுப்பினர்கள் சேர்ப்பு இயக்கம் நடத்தப்படும். 2023 பிப்ரவரி 10 ஆம் தேதி ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்கும் மாவட்ட அளவிலான கோரிக்கை பேரணி நடத்தப்படும் என கூறினார்.
2023 மார்ச் 28 ஆம் தேதி லட்சக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்கும் வகையில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்படும். அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற அரசு தவறும் பட்சத்தில், தமிழ்நாடு அரசிடம் நியாயம் கேட்டு வரும் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரூ.2 கோடி ஏல சீட்டு மோசடி: 7 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய தம்பதி.!