சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று ஆதிதிராவிடர்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் துணைத் தலைவர் எல். முருகன், சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், சேலம் மாநகராட்சி ஆணையர், மாநகர காவல் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முருகன், "சேலம் மாவட்டத்தில் கடந்த ஓராண்டாக கழிவுகளை அகற்றும்போது தொழிலாளர்கள் இறந்துபோகும் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. இது மகிழ்ச்சியான விஷயம்.
இது தொடர்பாக ஆதிதிராவிட மக்களுக்கு மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது. சீர்மிகு நகரம் என்ற திட்டத்தின் கீழ் ஆதிதிராவிட மக்கள் அதிகம் வசிக்கும் சேலம் நகரப் பகுதிகளையும் இணைத்து, அங்கே அடிப்படை வசதிகள் முழுமையாக நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
ஆதிதிராவிட மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பயோமெட்ரிக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படும் மாணவிகளுக்கு உரிய தீர்வுத் தொகை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஆண்டுக்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சாதி மறுப்புத் திருமணங்கள் நடைபெற்றுவருகின்றன. ஆனால் சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்கள் மீது ஆணவப்படுகொலை தாக்குதல் நடத்தப்படுவது தொடர்கிறது.
அதைத் தடுத்து நிறுத்தி குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகள் முனைப்புடன் செயல்படுகின்றன. இதில் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த கோரிக்கைகளின் அடிப்படையில் ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்றவும் தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் பரிசீலித்து-வருகிறது" என்று கூறினார்.
இந்தக் கூட்டத்தில், சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து வந்த ஆதிதிராவிட மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.