சேலம்: சேலம் மாவட்ட லாரி உரிமையாளர் சங்கத்தின் 75ஆம் ஆண்டு பவள விழா, சேலம் இரும்பாலைப் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழா சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரும், மாநில சம்மேளனத்தின் தலைவருமான தனராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவின் போது, தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சண்முகப்பா, டெல்லி அகில இந்திய மோட்டார் ட்ரான்ஸ்போர்ட் தலைவர் மதன், தெலங்கானா மோட்டார் ட்ரான்ஸ்போர்ட் துணைத்தலைவர் ஜவகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த விழாவின் போது நடந்த சிறப்புக் கூட்டத்தில், லாரி உரிமையாளர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சண்முகப்பா செய்தியாளர்ச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் தற்போது உள்ள அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. குறிப்பாக டீசல் விலையை லிட்டருக்கு ஐந்து ரூபாய் குறைப்பதாகவும், செயல்படாமல் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றுவதாகவும் வாக்குறுதி அளித்தது இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது" எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "பல ஆண்டுகளாக ஒவ்வொரு மாநில எல்லைகளிலும் உள்ள செக் போஸ்ட்களில் அதிகாரிகள், லாரிகளிடம் வேறு மாநிலத்திற்கு செல்வதற்கும், வேறு மாநிலத்திலிருந்து சொந்த மாநிலத்துக்கு வருவதற்கும் கையூட்டாக ஆயிரம் ரூபாய் முதல் 2 ஆயிரத்து 500 ரூபாய் வரை பெறப்படுகிறது.
இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. லாரி ஓட்டுநரிடம், அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ள நிலையில் எதற்காக அதிகாரிகளுக்கு கையூட்டு தர வேண்டும். எனவே இம்மாதம் 25ஆம் தேதி முதல் மாநில எல்லைகளில் உள்ள செக் போஸ்ட் அதிகாரிகள் கையூட்டு கேட்டால் பணம் தர மாட்டோம்" எனத் தெர்வித்தார்.
மேலும், அவற்றை மீறி வற்புறுத்தினால் வாகனத்தை அங்கேயே நிறுத்தி விட்டு போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவித்த சண்முகப்பா, தமிழகத்தில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வரியை கட்டச் சொல்லி வற்புறுத்துவதையும் நிறுத்த வேண்டும் எனக் கூறினார்.
மேலும், இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு கோரிக்கைகள் குறித்து, அகில இந்திய மோட்டார் ட்ரான்ஸ்போர்ட் காங்கிரசின் பொதுக்குழு கூட்டத்தில் விவாதித்து, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "நல்லதோ, கெட்டதோ தமிழகத்தை திமுக அல்லது அதிமுக தான் ஆள வேண்டும்" - தமிமுன் அன்சாரி