சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் தேசிய பெண் குழந்தைகள் தின விழாவினை முன்னிட்டு பெண்கள், பெண் குழந்தைகளுக்கான விருது வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தலைமையில் நடைபெற்றது. அதில், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற கருத்தினை வலியுறுத்தி மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு கோலத்தின் மத்தியில் மாவட்ட ஆட்சியர் வண்ண பலூன்களை பறக்கவிட்டார்.
இதை தொடர்ந்து இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் பேசும்போது தெரிவித்ததாவது:
"முதலமைச்சர் பழனிசாமி உத்தரவுப்படி சேலத்தில் பெண்களின் வளர்ச்சிக்காகவும், வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்காகவும், பெண் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காகவும் எண்ணற்ற பல திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கான ஒரு சிறப்பு முயற்சியாக சக்தி குழு உருவாக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளிகளிலும் சக்தி குழு அமைக்கப்பட்டு, இக்குழுவின் வாயிலாக பள்ளிகளில் பயின்று வருகின்ற பெண் குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அப்பிரச்னைகளுக்கு பள்ளி அளவில் தீர்வு காண்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சக்தி குழுவில் காவல்துறை, சமூக நலத்துறை, கல்வித் துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு மகளிர் திட்டம் போன்ற பல்வேறு துறைகளின் அலுவலர்கள், அங்கன்வாடி குழுக்கள் ஆகியோர் இணைந்து பள்ளியில் பயிலும் பெண் குழந்தைகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
பல்வேறு துறைகளில் தொடர்ந்து பெண்கள் சாதனைபடைத்து வருகின்றார்கள். அத்தகைய சாதனைகளை படைத்திட உறுதி மொழி ஏற்க வேண்டும். பாலின பாகுபாடு அறிந்து கருக்கலைப்பு செய்வதை முற்றிலும் தடுத்திட வேண்டும். பெண் குழந்தைகளின் விகிதத்தை மேம்படுத்த பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும்.
தொடர்ந்து கலை, இலக்கியம், ஓவியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண் குழந்தைகளை பாராட்டும் விதத்தில் 28 பெண் குழந்தைகளுக்கு “சேலம் தங்க மகள்” விருதுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மேலும் சக்தி குழு சிறப்பாக செயல்பட்டுவரும் ஒன்பது பள்ளிகளுக்கு பரிசுகளும், கோலப் போட்டியில் சிறந்த கோலம் இட்டு முதல் மூன்று இடங்களைப் பெற்ற மூன்று மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பரிசுகளையும் ஆட்சியர் ராமன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உள்பட சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படியுங்க: தேசிய பெண் குழந்தைகள் தின பேரணி - தொடங்கிவைத்த எஸ்பி