சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த புதுவளவு அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் தங்கவேல் (55). இவரது மகள் பிரியங்கா (23). இவரது தனது கணவர் சரத்குமார் (25).
இந்தத் தம்பதிக்கு கிருத்திக் குமார் (6) என்ற மகனும் மூன்று மாத பெண் குழந்தையும் இருக்கிறார்கள். இந்நிலையில், நேற்று (மார்ச் 3) தங்கவேல் பிரியங்காவின் வீட்டிற்குச் சென்றார். அப்போது குழந்தைகள் இருவரும் மயங்கிய நிலையிலும் பிரியங்கா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே குழந்தைகள் இருவரையும் தங்கவேல் சங்ககிரி அரசு மருத்துவனைக்கு கொண்டுசென்றார். அங்கு குழந்தைகளைப் பரிசோதித்த மருத்துவர்கள் பெண் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறினார். கிருத்திக் குமாருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த சங்ககிரி காவல் துறையினர் பிரியங்காவின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், "ஆறு மாதங்களுக்கு முன்பு பிரியங்கா தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்பவருடன் நெருங்கிப் பழகியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த தங்கவேல், அவரின் மகன் நந்தகுமார், மருமகன் சரத்குமார் ஆகியோருடன் சேர்ந்து பார்த்திபனை கொலைசெய்தார். இந்த வழக்கில் மூவரும் கைதாகி, சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இரு மாதங்களுக்கு முன்பு, தங்கவேலுவுக்கு பிணை கிடைத்ததால், வெளியே வந்துள்ளார். பின்னர் வேலை எதுவும் கிடைக்காத நிலையில், மகளுடன் தங்கவேல் வசித்துவந்தார். தனிமையில் வருமானம் இன்றி குழந்தைகளை கவனிக்க முடியாமல் வறுமையில் பிரியங்கா வாடியுள்ளார்.
இதில் மனம் வெறுத்த பிரியங்கா பெற்ற குழந்தைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். அதன்படி பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்றுள்ளார். கிருத்திக்கும் விஷம் கொடுத்து கொலைசெய்ய முயற்சி செய்துள்ளார்.
ஆனால் கிருத்திக் இறக்கவில்லை. இதனால் அவனின் கழுத்தை ஒயர் கொண்டு இறுக்கி உள்ளார். அதில் கிருத்திக் மயங்கிவிட்டான். இதனை அடுத்து அவன் உயிரிழந்துவிட்டதாகக் கருதி பிரியங்கா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்" என்று தெரிவித்தனர்.