சேலம்: வாழப்பாடி அருகே முத்தம்பட்டி பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். தனியார் பள்ளியில் பயிலும் குழந்தைகளை பள்ளியின் வேன் மற்றும் பேருந்துகள் மூலம் தினமும் கூட்டிக்கொண்டு வருவது வழக்கம்.
அந்த வகையில் இன்று (அக்.9), பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பெரிய கிருஷ்ணாபுரம் பகுதியில் இருந்து பள்ளியை நோக்கி, தனியார் பள்ளிக்கு சொந்தமான இரண்டு வேன்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது சேலம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் வந்த கொண்டிருந்த போது, ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற தனியார் பேருந்து, எதிர்பாராத விதமாக பள்ளி வேன்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், இரண்டு பள்ளி வேன்களிலும் பயணித்த ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை படிக்கும், 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். பள்ளி குழந்தைகள் சென்ற வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதை கண்ட அப்பகுதி மக்கள், விரைந்து வந்து படுகாயம் குழந்தைகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வாழப்பாடி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: திருட்டில் இறங்கிய பரோட்டா கடை ஓனர்.. வலை வீசிப்பிடித்த போலீசார்..
இந்த விபத்தால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ஏத்தாப்பூர் காவல் துறையினர், விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் படுத்தினர். தொடர்ந்து விபத்து குறித்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், விபத்தில் பலத்த காயமடைந்த இரண்டு குழந்தைகள், மேல் சிகிச்சைகாக சேலம் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனிடையே சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி குழந்தைகளை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரில் சந்தித்து நலம் விசாரித்து, குழந்தைகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.