சேலம்: பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 13 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 6 பேர் திமுக, 6 பேர் அதிமுக, ஒருவர் பாமகவை சேர்ந்தவர்கள். ஒன்றிய குழுத் தலைவராக அதிமுகவை சேர்ந்த ஜெகநாதன் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் நடைபெற்று முடிந்த ஒன்றிய குழுக் கூட்டத்தில், ஜெகநாதன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஒன்றியக் குழு உறுப்பினர்களான சங்கீதா, பூங்கொடி ஆகிய பெண் கவுன்சிலர்கள் இருவர் திமுகவினரால் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பனமரத்துப்பட்டி ஒன்றிய குழு தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் பேரில் தேர்தலை நடத்தக் கூடாது என வலியுறுத்தி, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜ முத்து, நல்லதம்பி, ஜெயசங்கரன், சுந்தரராஜன் ஆகியோர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தொடர்ந்து அதிமுக பெண் கவுன்சிலர்களை கத்தியை காட்டி மிரட்டி கடத்திச் சென்ற திமுகவினரை கண்டித்து ஆட்சியரகத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையடுத்து, தர்ணாவில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனிடையே திமுகவினரால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இரண்டு பெண் கவுன்சிலர்கள் பனமரத்துப்பட்டி ஒன்றியக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு திமுக உறுப்பினருக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதையும் படிங்க: 63 வழக்குகளில் தொடர்புடைய ரவுடிக்கு கரோனா பரிசோதனை; பின் சிறையில் அடைப்பு