சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொது விநியோகத் திட்டப் பணிகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் தலைமை வகித்தனர்.
அதனைத் தொடர்ந்து பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, 'சேலம் சீரங்கபாளையம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள மாதிரி நியாய விலைக் கடை பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டது. அதில் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட நியாய விலைப் பொருட்கள் அனைத்தும் சிறப்பான முறையில் தயார் செய்து, இந்நியாய விலைக் கடை மூலம் விற்கப்படுகிறது.
முதலமைச்சரின் நடவடிக்கையால் நெல்மணிகள் மழையில் நனைவதைத் தடுக்கும் வகையில், நேரடிக் கொள்முதல் நிலையத்திலிருந்து பெறப்படும் நெல்மணிகளை உடனடியாக அரவை நிலையத்திற்கு அனுப்பி, அதை அரிசியாக மாற்றம் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குக்கு அனுப்பப்படுகிறது.
மேலும், அவ்வாறு அனுப்பப்படும் பொருட்கள் தரமானதாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்திட ஏதுவாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு, ஆய்வு மேற்கொண்ட பிறகு நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது. கடந்த ஆட்சி காலத்தில் 376 அரவை நிலையங்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது 700 அரவை நிலையங்களாக விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்கு கருப்பு, பழுப்பு அரிசிகள் இல்லாத வகையில் அரிசி வழங்கும் வகையில் அனைத்து அரவை நிலையங்களிலும் இயந்திரம் பொருத்தப்பட்டு கருப்பு, பழுப்பு இல்லாத அரிசி வழங்கப்பட்டு வருகிறது. அரிசி, பருப்பு உள்ளிட்ட பொது விநியோகப் பொருட்கள் நல்ல முறையில் மக்களைச் சென்றடைய வேண்டும்.
நியாய விலைக் கடைகளில் பயோ மெட்ரிக் நடைமுறை மூலம் பொருட்கள் வழங்கும் திட்டம் மேம்படுத்தப்பட்டு, கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பதிவு செய்து பொருட்கள் வழங்கும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள 36 ஆயிரம் நியாய விலைக்கடைகளிலும் இத்திட்டதைச் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், கடந்த இரண்டரை ஆண்டு கால ஆட்சியில், சுமார் 16 லட்சம் நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், தொலைந்த குடும்ப அட்டைகளைப் பெறுவதற்கும், தபால் துறையின் மூலம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வயது முதிர்ந்தோர், மாற்றுத் திறனாளிகள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் ஆகியோரால் நியாய விலைக் கடைகளுக்கு வர முடியாத சூழல் உள்ளவர்களுக்குப் பதிலாக, மற்றவரிடம் பொருளைக் கொடுத்து அனுப்பிட ஏற்பாடு செய்து, தமிழ்நாட்டில் 3.50 லட்சம் நபர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. டெல்டா மாவட்டம் மற்றும் இதர மாவட்டங்களில் ரூ.238 கோடி மதிப்பில் 211 கிடங்குகள் அமைக்கப்பட்டு, 2.86 லட்சம் மெட்ரிக் டன் நெல் மணிகள் சேமிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, இந்த ஆண்டும் தஞ்சாவூர், செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், மதுரை போன்ற மாவட்டங்களில் 1.20 லட்சம் மெட்ரிக் டன் நெல் மணிகளை சேமித்து வைப்பதற்காக சுமார் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் சுமார் 4 லட்சம் மெட்ரிக் டன் நெல்மணிகளை சேமிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசும்போது, "சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு என அதிகளவிலான நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஒரே நேரத்தில் 423 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.40.80 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், கூட்டுறவுத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, தொழிலாளர் நலத்துறை, மகளிர் திட்டம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் மொத்தம் 598 பயனாளிகளுக்கு ரூ.2.01 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
இதற்கு முன்னதாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திலிருந்து நியாய விலைக் கடை மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் எவ்வாறு உறுதி செய்யப்படுகிறது என்பது குறித்த காணொலிக் காட்சி ஆய்வுக் கூட்டத்தில் திரையிடப்பட்டது.