அணைக்கு வரும் நீரின் வரத்து படிப்படியாகக் குறைந்துவருவதையடுத்து மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்திறப்பு 6 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.
தமிழ்நாடு - கர்நாடகா எல்லைப் பகுதியில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில், தென்மேற்குப் பருவமழையின் தீவிரம் குறைந்துள்ளது. இதனால் நேற்று முன்தினம் வினாடிக்கு 21 ஆயிரத்து 339 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 17 ஆயிரத்து, 790 கனஅடியாகச் சரிந்தது.
இதனால் ஒன்பதாயிரம் கனஅடியாக இருந்த நீர்த்திறப்பு 6 ஆயிரம் கனஅடியாக தற்போது குறைக்கப்பட்டுள்ளது. நேற்று 90.36 அடியாக இருந்த அணை நீர்மட்டம், காலை நிலவரப்படி 91.360 அடியாக சற்று உயர்ந்துள்ளது.
பிலிகுண்டுலுவிலிருந்து மேட்டூர் அணைக்கு எட்டாயிரத்து 286 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. அணையிலிருந்து மேற்கு, கிழக்கு கரை கால்வாய் பாசனத்திற்காக 700 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.