சேலம் - அம்மாபேட்டை வைத்தி உடையார் காடு பகுதியைச் சேர்ந்த ஜெயராமன், தனது வீட்டு பத்திரத்தினை கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் நகலெடுக்கச் சென்றபோது, அம்மாபேட்டை சிவகாமி மண்டபம் பகுதியில் தொலைந்து போனது.
தொலைந்து போன வீட்டு பத்திரத்தை கண்டுபிடித்து தரக்கோரி அம்மாபேட்டை காவல் நிலையத்திலும், மாநகர காவல் ஆணையர், மாவட்ட ஆட்சியர் வருவாய்த்துறை அதிகாரிகள் என பலரிடம் ஜெயராமன் தொடர்ந்து புகார் அளித்துள்ளார். இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறும் ஜெயராமன், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொடுக்கப்பட்ட ஏராளமான மனுக்களின் நகல்களை ஒரு அட்டைப் பெட்டியில் போட்டு, அதனை தலையில் சுமந்து கொண்டு நேற்றையதினம் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்தார்.
அப்போது ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் இருந்த காவல் துறையினர் ஜெயராமனை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அட்டைப்பெட்டியை பறிமுதல் செய்த காவல்துறையினர், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க ஜெயராமனை மட்டும் அனுப்பி வைத்தனர். தனது மனு மீது நடவடிக்கை எடுக்க அலட்சியம் காட்டுவதாக காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது ஜெயராமன் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: மதுரை மாநகரில் 2017 - 2019 வரை 12,817 கிராம் தங்க நகைகள் வழிப்பறி - ஆர்டிஐ மூலம் கிடைத்த அதிர்ச்சி தகவல்