சேலம் : ஆண்டுதோறும் மாசி மாதம் வரும் அமாவாசை இந்து மக்கள் வழிபாட்டில் மிகவும் பிரசித்திபெற்றது. இந்த மாசி அமாவாசை அங்காளம்மனுக்கு உகந்தது என்பதால் பக்தர்கள் அங்காளம்மன் வேடம் தரித்து ஆடு கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்த நிகழ்வு சேலத்தில் மிகவும் பிரசித்திப்பெற்றது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருந்தது. அதனால் மயானக் கொள்ளை தடைபட்டிருந்தது.இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வு வழங்கபட்டதால் மயானக் கொள்ளை நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. சேலம் ஜான்சன் பேட்டை இடுகாடு, காக்காயன் சுடுகாடு மைதானத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆடல் பாடலுடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர்.
அங்காளம்மன் , காளி வேடம் தரித்து வந்தவர்களிடம் ஆசீர்வாதம் பெறும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சாலையில் படுத்து கொண்டனர். அவர்களை தாண்டி செல்வதால் பக்தர்களின் பிரச்சினைகள் தீரும் என்பது ஐதீகம். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கானோர் சாலையில் விழுந்து அங்காளம்மன் வேடம் தரித்து வந்தவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றனர் .
தொடர்ந்து சுடுகாட்டுக்குச் சென்று அங்குள்ள சாம்பலை தங்கள் மீது, கோழி மற்றும் ஆடு ரத்தத்தை சோற்றில் கலந்து சூரையிட்டனர்.
இதேபோல் சேலம் மாநகரின் பல்வேறு பகுதியில் உள்ள அங்காளம்மன் ஆலயங்களில் மயான கொள்ளை நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி... 7 பேர் படுகாயம்!