கேரள மாநில காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் உடல், திருச்சூரில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு பொது மருத்துவமனைக்கு தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது. மணிவாசகம் உடலுடன் ஆம்புலன்சில் அவரின் சகோதரி லட்சுமி உள்ளிட்ட உறவினர்கள் வந்திருந்தனர்.
தற்போது, மருத்துவமனை பிணவறையில் மணிவாசகத்தின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. பிணவறைக்கு வெளியே மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள், இடதுசாரி அமைப்பினர், தமிழ் தேசிய அமைப்பினர், திராவிட இயக்க அமைப்பினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டுள்ளனர். அனைவரும் கேரள மாநில அரசுக்கும், அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் கடும் கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்புவதால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு நிலவிவருகிறது.
அரசு மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மணிவாசகத்தின் சகோதரி லட்சுமி கூறுகையில், "மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் மணிவாசகத்தின் உடலைப் பெற்றுக்கொண்டு சேலம் வந்திருக்கிறோம். அவரின் மனைவிக்கும் சகோதரிக்கும் பரோல் இன்னும் கிடைக்காத நிலையில், நாளை கிடைத்துவிடும் என்று கூறியிருக்கிறார்கள். அவ்வாறு பரோல் கிடைத்த பிறகு நாளை மணிவாசகத்தின் உடல், சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படும். மணிவாசகத்தை கேரள அரசு அநியாயமாகக் கொன்றுவிட்டது. அம்பேத்கர் எழுதிய சட்டத்தை அதிகார துஷ்பிரயோகத்துக்காக கேரள அரசும், கேரள காவல் துறையினரும் பயன்படுத்துகின்றனர்” என்று வேதனையோடு தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாவோயிஸ்ட் மணிவாசகம் யார்? - பின்னணித் தகவல்கள்...