கேரளாவில் கடந்த மாதம் 28ஆம் தேதி மாவோயிஸ்ட்டுகளுக்கும், தடுப்புப் பிரிவினருக்கும் நடந்த தூப்பாக்கிச்சூட்டில் மாவோயிஸ்ட் மணிவாசகம் உட்பட நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
துப்பாக்கிச் சூட்டில் இறந்த மணிவாசகத்தின் உடலை காவல் துறையினர் உடற்கூராய்வு செய்து சேலம் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பாக வைத்திருந்தனர். இந்நிலையில் மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கவேண்டும் எனவும், திருச்சி சிறையில் உள்ள மணிவாசகத்தின் மனைவி மற்றும் தங்கைக்கு பரோல் வழங்க வேண்டும் எனவும் மணிவாசகத்தின் உறவினர் அன்பரசு என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார்..
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி அரசு மருத்துவமனையில் உள்ள மணிவாசகத்தின் உடலை அடக்கம் செய்யும் வரை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் பாதுகாப்புடன் வைக்க வேண்டும் எனவும், இதனை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
அதேபோல் திருச்சி சிறையில் உள்ள மணிவாசகத்தின் மனைவி மற்றும் தங்கைக்கு மூன்று நாள் பரோல் வழங்கியும் உத்தரவிட்டார்.
பரோலில் வந்த இருவரும் சொந்த ஊரான சேலம் மாவட்டம், தீவட்டிப்பெட்டி கிராமத்தையடுத்த ராமமூர்த்தி நகருக்கு சென்றனர். பின்னர் காவல் துறை பாதுகாப்புடன் மருத்துவமனையில் இருந்த மணிவாசகத்தின் உடல் அடக்கம் செய்ய நேற்றிரவு 9மணியளவில் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இதையும் படிங்க :சேலத்தில் உள்ள மாவோயிஸ்ட் மணி உடலுக்கு பலத்த பாதுகாப்பு!