சேலம்: மன்னார் பாளையம் அருகில் உள்ள அல்லிக்குட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜ்கமல். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் வைசாலி. இந்த இருவரும் கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் இருவரும் சாதிமறுப்பு திருமண விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சுயமரியாதை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு இரு வீட்டார் தரப்பிலும் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து சேலம் சுப்பராயன் சாலையில் உள்ள பாரதியார் சிலை முன்பு இருவர் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டு உறுதிமொழி எடுத்தனர். இந்த திருமணம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் மணமக்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த திருமணம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து மனமகள் வைசாலி கூறுகையில்,‘நாங்கள் இருவரும் காதலிக்க தொடங்கும்போதே சுயமரியாதை திருமணம் தான் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தோம். சாதி மறுப்பு சுயமரியாதை திருமணம் குறித்து என்னிடம் எனது தாயார் தான் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார் அவருக்கு நன்றி' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:டெங்கு காய்ச்சல் பாதித்த பள்ளி மாணவன் உயிரிழப்பு! சிறுநீரகம் செயலிழந்ததாக மருத்துவர்கள் சான்று!