தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் கடந்த 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சேலத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரமுகர்களுடன் மாவட்ட ஆட்சியர் ராமன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட், தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய ஆட்சியர் ராமன், " சேலத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்குத் தேவையான அனைத்து பயிற்சிகளும் ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் தயார் நிலையில் உள்ளன. எனவே, தேர்தல் நடைபெறவுள்ள வாக்குச்சாவடிகளில் தேவையான அடிப்படை வசதிகளும் அமைக்கப்பட்டு வருகிறது. வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகளும் முடிவடைந்தது.
எனவே, வருகின்ற உள்ளாட்சித் தேர்தல் அமைதியான முறையில் நடந்திட கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். தேர்தல் விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: அதிகரிக்கும் தேக்கநிலை: பின்வாங்கும் மத்திய நிதியமைச்சர்!