சேலம் மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத் தலம் ஏற்காடு. சேர்வராயன் மலைத்தொடரில் ஏற்காடு உள்ளிட்ட 67 மலை கிராமங்கள் அமைந்துள்ளன. இதில், ஏற்காட்டில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கோவிலூர் மலைக்கிராமம். அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ள இக்கிராம மக்கள் 30 ஆண்டுகாலமாக சாலை வசதி கிடைக்காமல் அவதிப்பட்டுவருகின்றனர்.
இது குறித்து கோவிலூர் கிராம மக்கள் கூறும்போது, ‘எங்கள் ஊரில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே குழந்தைகள் பயில முடியும். சரியான சாலை வசதி இல்லாததால் பெண் குழந்தைகளைப் படிக்கவைக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். கல்லூரி படிப்பைத் தொடரவும் இளைஞர்கள் வெளியூருக்குச் சென்று தங்கிப் படிக்க வேண்டிய நிலை உள்ளது.
குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்போது பல கி.மீ. தூரம் கரடுமுரடான சாலையில் நடந்து செல்ல வேண்டியுள்ளது. கர்ப்பிணி பெண்கள் பலர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளனர்.
2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலை சாலை வசதி அமைத்துத் தராததால் புறக்கணித்தோம். அரசு உயர் அலுவலர்களும், தேர்தல் அலுவலரும் அப்போது சாலைவசதி அமைத்துத் தருவதாக வாக்குறுதியளித்தனர். ஆனால், இன்றுவரை எந்த மாற்றமும் ஏற்படவில்லை. தற்போது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலையும் புறக்கணித்தோம். ஆனால், அரசிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை’ என வேதனையுடன் கூறியுள்ளனர்.
டிஜிட்டல் இந்தியாவை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் வேளையில் சாலை வசதி கூட கிடைக்கப்பெறாத கோவிலூர் மலைக்கிராமத்தை அரசு கவனிக்குமா?' என தெரிவித்துள்ளார்.