சேலம் காட்டூர் பகுதி முறுக்கு வியாபாரி கணேசன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி கதிர்வேல், கடந்த மே இரண்டாம் காவல்துறையினர் நடத்திய என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதற்கு மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து காரிப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உண்மை அறியும் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், இன்று உண்மை அறியும் குழுவினர் செய்தியாளர்களை சந்தித்போது, 'காவல்துறையின் என்கவுன்ட்டரில் உயிரிழந்த கதிர்வேலின் சாவில் நிறைய சந்தேகங்கள் எழுந்துள்ளது. காவலரை தாக்கிவிட்டு ஓட முயற்சித்த கதிர்வேலை தற்காப்புக்காக காவல்துறையினர் சுட்டதில் மரணம் அடைந்தார் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இது தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் காவல்துறையினர் மீது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. மே ஒன்றாம் தேதி சேலம் மத்திய பேருந்து நிலையம் அருகே வீராணம் காவல் நிலைய உதவி ஆய்வாளரிடம் ரவுடி கதிர்வேல் சரணடைந்துள்ளார். பின் அவரை காரிப்பட்டி காவல்துறையினரிடம் ஒப்படைத்து உள்ளனர்.
ஆனால், அன்று இரவு முழுவதும் கதிர்வேலை அடித்து துன்புறுத்தி கொலை செய்து இருக்கவே வாய்ப்பு இருக்கிறது . அதன் பின்னரே அது என்கவுன்ட்டராக மாற்றப்பட்டு உள்ளது. எங்களின் விசாரணைக்கு காரிப்பட்டி காவல்துறையினரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் ஒத்துழைப்பு தர மறுத்து எங்களை சந்திக்க மறுத்து விட்டனர்.
இது போலி என்கவுன்ட்டர் என்பதற்கு வலுவான ஆதாரம் எங்களிடம் உள்ளது. எனவே காவல்துறை மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு வசதியாக இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்ட கதிர்வேலின் குடும்பத்தாருக்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும்' என்று கூறினார்