சேலம்: தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் கலைஞர் உரிமைத்தொகை ரூபாய் 1000 கிடைக்காத பெண்கள் மேல் முறையீடு செய்வதற்காக வட்டாட்சியர் அலுவலகம் சென்றுள்ளனர். அங்கு, இணையதள வசதிகள் முடங்கியதால் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திமுக, சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் குடும்ப பெண்களுக்கு மாதம் ரூபாய் 1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனத் தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டு இருந்தன. அதன்படி, சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை அடுத்து இந்த வாக்குறுதி விரைவில் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கும் திட்டம் ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ளன. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தைக் காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (செப்.15) அன்று தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத நபர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டது.
அதில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பயனாளர்களாக இணைக்கப்பட்ட 1 கோடி 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு கடந்த செப்டம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் அவரது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டன. இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்து நிராகரிக்கப்பட்ட சுமார் 56 லட்சம் பேருக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என கூறப்பட்டு இருந்தன.
மேலும், நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை குறிப்பிட்டு குறுஞ்செய்தி வரும். அதன் பின்னர், 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் மூலம் திட்டத்திற்கு மீண்டும் சரியான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். எனவே, திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டன.
இந்நிலையில், இன்று (செப்.19) மேல்முறையீடு செய்வதற்காக சேலம், அஸ்தம்பட்டி, சூரமங்கலம், நெத்திமேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் உரிமைத்தொகை கிடைக்காத பெண்கள் நூற்றுக் கணக்கானோர் தகுந்த ஆவணங்களுடன் சென்றுள்ளனர். மேலும், உரிமைத் தொகை பெற விண்ணப்பம் செய்ய முயன்ற போது இசேவை மையங்களில் இணையதள வசதி முழுமையாக இல்லாததால் வெகு நேரம் காத்திருந்த மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், மகளிர் உரிமைத்தொகை நிராகரிக்கப்பட்டவர்கள் விண்ணப்பிகலாம் என்று தமிழக அரசு அறிவித்த நிலையில் இணையதள வசதி முடங்கி உள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இணையதள வசதி முடங்கி உள்ளது குறித்து பெண்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அதிகாரிகள் பொறுமையுடன் பதில் அளித்தனர்.
இந்நிலையில், அதிகாரிகள் அளித்த பதிலில் திருப்தி அடையாத பெண்கள் தங்களது விண்ணப்பம் நிராகரிக்க பட்டத்திற்கான முழுமையான காரணத்தை அதிகாரிகள் கூற மறுப்பதாக குற்றச்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: பழைய நாடாளுமன்றத்திற்கு பிரியா விடை? அடுத்த 5 நாட்கள் நடக்கப் போவது என்ன?