சேலத்தில் உள்ள வீடுகளுக்கு குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு வழங்கும் திட்டத்தை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மிக விரைவில் செயல்படுத்த உள்ளது.
இந்தத் திட்டத்திற்காக குழாய்கள் பதிக்கும் பணி முழுவீச்சில் தற்போது நடைபெற்றுவருகிறது.
சிலிண்டர் எரிவாயு பயன்படுத்தும் நிலையை மாற்றி ஒவ்வொரு வீட்டுக்கும் தேவையான எரிவாயுவை வீடுகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கும் திட்டத்தை தற்போது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்படுத்த முனைப்பு காட்டிவருகிறது.
இந்தியாவின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் இயற்கை எரிவாயு பயன்பாட்டை விரிவுபடுத்தவும் மத்திய அரசு நகர எரிவாயு விநியோக திட்டம் என்பதை தொடங்கி உள்ளது. இதற்காக சேலம் மாவட்டத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வீடுகளுக்கு குழாய்கள் வழியாக இயற்கை எரிவாயு வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பணியைத் தொடங்கிய இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தற்போது சேலம் மாநகரில், சூரமங்கலம், சீலநாயக்கன்பட்டி , தாதகாப்பட்டி ஆகிய பகுதிகளில் சாலை ஓரங்களில் பிரதான குழாய்கள் அமைக்கும் பணியை முழுவீச்சில் செய்து வருகிறது.
இது தொடர்பாக ஐஓசி அலுவலர்கள் கூறுகையில் ," தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இந்த திட்டம் புதிது. இது முதலில் சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.
சேலம் மாநகரில் உள்ள சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் காலங்களில் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்படும். ஏனெனில் தற்போது மாதந்தோறும் சிலிண்டருக்கு செலவிடப்படும் தொகை அளவை காட்டிலும் 40 விழுக்காடு குறைவாகவும் , பெட்ரோல் விலையைவிட 60 விழுக்காடு குறைவாகவும் , டீசல் விலையைவிட 45 விழுக்காடு குறைவாகவும் இயற்கை எரிவாயுவின் விலை இருக்கும்.
சேலத்தில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து தமிழ்நாட்டில் உள்ள பிற மாவட்டங்களுக்கும் இந்த சேவை விரிவுபடுத்தப்பட உள்ளது.
சேலம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 1300 கோடி ரூபாயில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது " என்று தெரிவித்தனர்.
கரோனா பொதுமுடக்கத்தால் கடந்த ஆறு மாதமாக நிறுத்தப்பட்டிருந்த குழாய் பதிக்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.